வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (17:06 IST)

40 வருடங்களுக்கு ஒருமுறை அத்தி வரதர் வெளியே வருவது ஏன்? பதில் சொல்லும் புராணம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்குளத்தில் பள்ளி கொண்டுள்ள அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 1ம் தேதி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். 48 நாட்கள் (ஒரு மண்டலம்) பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்தி வரதர் மீண்டும் திருக்குளத்தில் துயில் கொள்வார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தை காண தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமிருந்து லட்சோப லட்ச மக்கள் வருகை தருவார்கள். அத்தி வரதர் எப்படி உருவானார் அவரது கதை என்ன என்பதற்கான விளக்கத்தை புராணம் நமக்கு தருகிறது.

இப்போதைய காஞ்சிபுரம் புராண காலத்தில் அத்திவனம் என்ற பெருங்காடாக இருந்தது. அத்திமரங்கள் அடர்ந்த காடு என்பதால் அத்திவனம் என்று அழைக்கப்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மர் அங்கே பகவான் விஷ்ணுவுக்காக யாகம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த யாகத்திற்கு தனது துணைவியார் தேவி சரஸ்வதியை அவர் அழைக்க மறந்து போனார்.

வேதங்களின் மூலவர் பிரம்மர் என்றாலும் கல்வியின் மூல தேவி சரஸ்வதி ஆவார். அவரை யாகத்திற்கு அழைக்காததை பிரம்மர் பெரிதுபடுத்தவில்லை. இதனால் சினம் கொண்ட சரஸ்வதி தேவியார் வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து வெள்ளமாக மாறி அத்திவனம் நோக்கி ஆவேசமாக விரைந்தாள்.

அத்திவன விலங்குகள், மக்கள் யாவும் வெள்ளத்தில் அடித்து மூழ்க இருந்த நிலையில் பிரம்மன் யாரிடம் முறையிட முடியும்? காக்கும் கடவுளான திருமாலிடம் வேண்டினார் பிரம்ம தேவர். வேள்வியின் அக்கினியிலிருந்து நெருப்பே உருவான அத்தி வரதராய் எழுந்தருளினார் திருமால்.

அத்தி வரதரின் வெப்பம் தாளாமல் தன் திசையை மாற்றி கடல் சேர்ந்தாள் வேகவதியாய் வந்த தேவி சரஸ்வதி. பிறகு பிரம்மரிடம் சென்ற திருமால் “அத்தி வரதனாய் இவ்வூரை நான் காத்து நிற்க எனதுருவை நீர் செய்து வெம்மை காக்க குளிர்விப்பீர் திருகுளத்து நீரால்..” என அருளினார்.

அதன்படி அத்திவரதருக்கு சிலை செய்து அதை திருகுளத்தில் துயில் கொள்ள செய்ததாய் புராணம் சொல்கிறது. 40 வருடங்களுக்கு ஒருமுறை எழுந்தருளும் திருமாலின் அத்தி வரத ரூபத்தை தரிசிப்பதன் மூலம் பாவ முக்தி பெறுவதோடு, நித்ய பூர்ண வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

40 வருடங்களுக்கு பிறகு வரும் ஜூலை 1 ல் எழுந்தருளும் அத்தி வரதர் ஆக்ஸ்டு 17 வரை பக்தர்களுக்கு ஆக்கினி திருகோலமாய் காட்சியளித்து அருள் தருவார். அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தகோடிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் காஞ்சீபுரம், அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் காஞ்சிபுரத்தில் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அத்தி வரதரை தரிசிக்க இந்து சமய அறநிலைய துறையின் வலைதளத்தில் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தியுள்ளார்கள்.