செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (14:10 IST)

பணம் கொடுத்து தேர்தலில் சீட் வாங்கியவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் - மு.க.அழகிரி

தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி தொடர்ந்து தி.மு.க.வையும், தலைவர் கருணாநிதியையும் காப்பாற்றுவதே குறிக்கோள் என்று கூறிக்கொண்டு தி.மு.க.வுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வருகிறார்.
M.K.Alagiri
ஊர் ஊராக சென்று எதிர்ப்பாளர்களை திரட்டும் மு.க.அழகிரி, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த கல்குறிச்சியில் தி.மு.க. ஊராட்சி ஒன்றிய செயலாளர் கருப்பு இல்ல காதணி விழாவில் மு.க.அழகிரி இன்று கலந்து கொண்டு பேசியதாவது:–
 
தி.மு.க.விலிருந்து யார் என்னை சந்தித்தாலும் அவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அந்தமாதிரி நேரத்தில் என்னை வரவேற்க இங்கு ஆயிரக்கணக்கில் தொண்டர் கூடியிருப்பதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
 
தி.மு.க.வில் ஜனநாயகம் செத்து விட்டது. இந்த கல்குறிச்சி எனக்கு ஒன்றும் புதியதல்ல. 1989–ல் சட்டசபை தேர்தலில் தங்கபாண்டியனுக்காக வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டிருக்கிறேன். தங்கபாண்டியன் வீட்டுக்கும், தோட்டத்துக்கும் நூறு தடவைக்கும் மேல் சென்றுள்ளேன். ஆனால் இப்போது எனக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை.
 
ஆனால் இந்த தேர்தலில் பணம் கொடுத்தவர்களுக்குதான் தி.மு.க.வில் சீட்டு கொடுத்துள்ளார்கள். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முகமது ஜலீல் கறுப்பு, சிவப்பு நிறத்தைகூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் பணத்திற்காக அவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆகிய 3 பேருக்கும் அந்த பணத்தில் பங்கு போயிருக்கிறது.
 
இந்தமாதிரி பணம் கொடுத்து போட்டியிடுபவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும். திருமங்கலம், திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட அப்போது அ.தி.மு.க. பயந்தது. தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவிக்கு உரிய மரியாதை எதையும் தரவில்லை. வட்டச்செயலாளருக்கு உள்ள மரியாதையைகூட பதவிக்கு தரவில்லை.
 
எனவே இந்த தேர்தலில் பணம் கொடுத்து நிற்பவர்களுக்கு நீங்கள் (தொண்டர்கள்) தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க.அழகிரி பேசினார்.