வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்: தேனியில் பரபரப்பு..
தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லூரி, பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். இதனால் தேனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடந்து இரண்டு மாதங்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதை தற்போது காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உணர்ந்து இருப்பார்கள் என்றும் எனவே வாக்குப்பதிவு நடந்த ஒரு சில நாட்களுக்குள் அல்லது வாரங்களுக்குள் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Edited by Mahendran