வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (10:54 IST)

சென்னையில் தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கற்பழித்து கொலை: இளைஞர் கைது

சென்னையை அடுத்த ஆவடியில்  22 வயது இளம் பெண்ணை தலையில் கல்லைப்போட்டு கற்பழித்து கொலை செய்துவிட்டு, அருகில் தூங்கிக்கிடந்த மகளையும் கொலை செய்த குடுகுடுப்புகாரனை போலீசார் கைது செய்தனர். 


 
சென்னை ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வந்த நரிக்குறவர் ஒருவர், தனது 5 வயது மகனுடன் ஊர் ஊராக பாசிமணி, கம்மல் வியாபாரத்துக்கு சென்று விட்டார். வீட்டில் அவருடைய 22 வயது மனைவியும், 3 வயது மகளும் இருந்தனர். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆவடியில் உறவினர் வீட்டுக்கு வந்த வீரக்குமார், இரவு நேரங்களில் குடித்துவிட்டு தனியாக இருந்த பெண்ணிடம் அடிக்கடி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு தகராறு செய்து வந்தார்.
 
இந்த நிலையில் 22வயது பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்ட வீரக்குமார், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு தனது மகளுடன் அந்த பெண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
 
இளம்பெண் சத்தம் போடாமல் இருக்க வீட்டுக்கு வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து அவரது தலையில் போட்டார். இதில் அந்த பெண், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அப்போது உயிருக்கு போராடிய அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். அந்த கல் அருகில் படுத்திருந்த அவருடைய மகள் முகத்திலும் விழுந்ததால் அவள், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தாள்.
 
இதையடுத்து அங்கிருந்து வீராக்குமார் தப்பியுள்ளார். இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், தாய், மகள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு ஓடிச்சென்று ஆவடி காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கு சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து வைத்து இருந்த வீரக்குமாரை (வயது 21) பார்த்து குரைத்து விட்டு, அவரை கவ்விப்பிடித்தது. இதையடுத்தே வீரக்குமார் கையும் களவுமாக சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் தாய், மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.