செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:30 IST)

நடுரோட்டில் பிறந்த குழந்தை: பிரசவம் பார்த்த எழுத்தாளர்!

கூலி வேலை செய்யும் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஆட்டோ ட்ரைவராக பணியாற்றி வரும் எழுத்தாளர் சந்திரன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படத்திற்கு பெரும் தூண்டுகோலாக இருந்தது “லாக்-அப்” என்ற நாவல். அந்த நாவலை எழுதிய எழுத்தாளர் சந்திரன் கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.

சிங்காநல்லூர் பகுதியில் உள்ள துளசி லே அவுட் பகுதியில் ஒடிசா தொழிலாளர்கள் பலர் கூலி வேலை செய்தபடி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி எழுந்துள்ளது. உடனடியாக அவரை தூக்கி கொண்டு முக்கிய சாலைக்கு விரைந்த அந்த பெண்ணின் கணவர் ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில், இதுகுறித்து அறிந்த எழுத்தாளர் சந்திரன் தனது ஆட்டோவில் அந்த பெண்ணை அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் வேறு வழியின்றி சந்திரன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் கோயம்புத்தூர் பகுதிகளில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்திரனின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.