1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (16:47 IST)

கூல் லிப்-ஐ இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது.? 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - நீதிமன்றம் அதிரடி.!!

Cool Lip
கூல் லிப்-ஐ பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
இதுதொடர்பான வழக்கு  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.   தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் , பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார். தற்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதை பொருட்கள் பயன்பாடே காரணம் என்றும் கூல் லிப் போதைப்பொருளுக்கு மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
 
போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, மருத்துவ பரிசோதனைகளை செய்வது போன்ற எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். கூல் லிப்-ஐ பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்த வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோனேபேட், பகுதியை சேர்ந்த தேஜ்ராம் தரம் பால் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கர்நாடகா மாநிலம் தும்குரு, அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் ஏரியா, பகுதியை சேர்ந்த VRG புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களையும் இந்த வழக்கில் நீதிமன்றமே தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பதிவாளருக்கு ஆணையிட்ட நீதிபதி,  வழக்கு விசாரணையை செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.