முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது.! கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது - கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை..!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது என்பன உள்ளிட்ட ஐந்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சிபிஐ போலீசாரால் கைதான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று ஐந்து நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.
அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்றும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு கெஜ்ரிவால் செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தொடர்பான எந்த சாட்சியுடனும் தொடர்பு கொண்டு பேசக் கூடாது என்றும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் பிணையத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.