வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (10:58 IST)

குட்டி ஸ்டோரியில் விஜய் சொன்ன பாண்டிய மன்னன் யார்? அவர் கதை என்ன?

Pandya King and Vijay

நேற்று தமிழக வெற்றிக் கழக உரையில் விஜய் குறிப்பிட்டு பேசிய பாண்டிய மன்னன் யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

 

 

நேற்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் பேசிய கட்சி தலைவர் விஜய், போருக்கு சிறுவயதிலேயே சென்ற பாண்டிய மன்னன் குறித்த கதையை கூறினார். ஆனால் அவரது பெயரை சொல்லாமல் அதை தொண்டர்கள் தேடி தெரிந்து கொள்ளுமாறு கூறினார்.

 

அந்த சிறுவயது பாண்டிய மன்னன் யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தில் மிகவும் இளைய பிராயத்தில் முடிசூட்டிக் கொண்டவர்தான் தலையாங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் தம்பி வெற்றிவேல் நெடுஞ்செழியனின் மகன் என்பது ஒரு கருத்து. ஆனால் இவரது காலக்கட்டம் குறித்த சரியான தகவல்கள் கிடைப்பதில் குழப்பம் உள்ளது.
 

 

பாண்டிய மன்னராக முடிச்சூட்டிக் கொண்ட நெடுஞ்செழியன் தனது முதல் போரிலேயே சோழ, சேர அரசர்களை ஒன்றாக எதிர்கொண்டான். சோழ அரசன் பெருநற்கிள்ளி, சேர மன்னன் மாந்தரஞ்சேரல் மற்றும் இன்னபிற குறுநில மன்னர்கள் இணைந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர்.

 

தற்போதைய அரசன் நெடுஞ்செழியன் சிறுவன். அவனால் தங்களை வீழ்த்த முடியாது என எண்ணினர். ஆனால் வீரமிகு நெடுஞ்செழியன் எதிரி படைகளை தலையாங்கானம் என்ற ஊரில் எதிர்கொண்டு தீரமுடன் சண்டையிட்டார். அதில் பின்வாங்கிய படைகள் சோழ தேசத்திற்குள்ளேயே திரும்ப ஓடியபோது நெடுஞ்செழியன் விரட்டி சென்று போரை வென்றதால் அவன் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என அழைக்கப்படலானான். நெடுஞ்செழியனுக்கு மறப்போர்ச் செழியன், கடும்பக்கட்டு யானை நெடுந்தேர் செழியன் என்ற பட்ட பெயர்களும் உண்டு.

 

Edit by Prasanth.K