புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (18:55 IST)

சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? டாக்டர் ராமதாஸ்

ramadoss
இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது: முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஒதிஷாவில் இருந்து வந்து மீன்பிடி தொழிலாளர்களாக பணி செய்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை மீட்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மேலும் 19 மீனவர்களை சிங்களப்படை கைது செய்திருப்பதை இயல்பான ஒன்றாக கருத முடியாது. தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் அவர்களை சிங்களக் கடற்படை கைது செய்து வருகிறது என்பதை பலநூறு முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இதை உணர்ந்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதங்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பது போதாது. அதனால் எந்த பயனும் ஏற்படாது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் - கைது நடவடிக்கைகள் குறித்த வழக்கை சில நாட்களுக்கு முன் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காதது ஏன்? என்று வினா எழுப்பியிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகாவது மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.