ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (13:55 IST)

தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது -டிடிவி.தினகரன்

dinakaran
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த இருநாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்கள் (Crisis Management Centre) அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்ற திமுகவின் 115வது தேர்தல் வாக்குறுதியின் தற்போதைய நிலை என்ன ?  என்று டிடிவி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
 
''எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர்  கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது - இலங்கையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். 
 
கடந்த 3 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று இரவு மேலும் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை மட்டுமே  வாடிக்கையாக கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன ? 
 
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த இருநாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்கள் (Crisis Management Centre) அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்ற திமுகவின் 115வது தேர்தல் வாக்குறுதியின் தற்போதைய நிலை என்ன ? 
 
எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை தொடராமல், பாரத பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதோடு,  வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் அச்ச உணர்வின்றி மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.