மும்மொழி கொள்கையை ஏற்பதாக ஒருபோதும் கூறியதில்லை: கனிமொழி எம்பி
மும்மொழி கொள்கையை முதலில் ஏற்பதாக சொல்லிவிட்டு, அதன் பிறகு திமுக அரசு மறுப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டிய நிலையில், மும்மொழி கொள்கையை ஏற்பதாக திமுக எம்பிக்கள் ஒருபோதும் கூறியது இல்லை என கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மும்மொழி கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. புதிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு முரண்பாடுகள் இருந்தன. அதனால் நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மும்மொழி கொள்கையை ஏற்பதாக திமுக எம்பிக்கள் ஒருபோதும் கூறியது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். ஆரம்பத்திலிருந்து நாங்கள் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். நாங்கள் எப்போதும் எங்கள் முதல்வருடன் நிற்கிறோம்.
திமுக எம்பி களையும் தமிழ்நாட்டு மக்களையும் பொய்யர், நாகரீகம் அற்றவர்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran