வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 மே 2016 (11:06 IST)

அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு புதுப்பெயர் சூட்டிய விஜயகாந்த்

நத்தை மெதுவாகத்தான் செல்லும். எனவே, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஸ்லோ விஸ்வநாதன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், "விருதுநகரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதில் பிரச்சனை உள்ளது. சிவகாசி பகுதியில் தினமும் பட்டாசு விபத்து நடைபெறுகிறது. இதில் காயமடைபவர்களை மதுரை அல்லது திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
 
இங்கு அமைச்சர் இருந்தும் தரமான மருத்துவமனை அமைக்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான மருத்துவமனை அமைப்போம். திமுக, அதிமுக இரு கட்சிகளும் விஷச் செடிகள். அவற்றைக் களைய வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிகளால் நீங்கள் என்ன பலனை கண்டீர்கள்?
 
நாங்கள் ஆட்சி அமைத்தால் நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வரி வசூலை ரத்து செய்வோம். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்.படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். நாங்கள் அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்துள்ளோம். தற்போதுள்ள அதிகாரிகள், சாதி சான்றிதழ், ரேசன் கார்டு தர பணம் கேட்கின்றனர்.
 
அதாவது, கடமையைச் செய்ய பணம் கேட்கின்றனர். மின்துறையில் ரூ.525 கோடி ஊழல் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இத்துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். நத்தை மெதுவாகத்தான் செல்லும். எனவே, அவர் ஸ்லோ விஸ்வநாதன்.
 
தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது கருத்துக்கணிப்பு கிடையாது. கருத்துத் திணிப்பு. எனவே, அதை நம்பாதீர்கள். ஆண்ட கட்சி, ஆளும் கட்சியை வீட்டிற்கு அனுப்புங்கள். இது தர்மவான்களுக்கும், அதர்மவான்களுக்கும் நடக்கும் யுத்தம். அதிமுகவும், திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.
 
இதிலிருந்து என்ன தெரிகிறது? இருவரும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. காமராஜர் படி, படி என்றார். ஜெயலலிதா குடி, குடி என்கிறார். திமுக, அதிமுகவிடம் முரட்டுப் பணம் உள்ளது என்கின்றனர். எங்களிடம் முரட்டு இளைஞர்கள் உள்ளனர்.
 
தமிழகத்தை தலை நிமிரச் செய்வேன் என ஜெயலலிதா கூறுகிறார். முதலில் உங்கள் தொண்டர்களை தலை நிமிரச் செய்யுங்கள். அதற்குப் பின் தமிழகத்தை தலை நிமிரச் செய்யலாம்” என்று கூறியுள்ளார்.