ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (15:06 IST)

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே தனது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும் சொன்னார்.

சில நாட்களுக்கு முன்பு தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.  அதன்பின் கடந்த 27ம் தேதி விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் 8 லட்சம் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

இந்த மாநாட்டில் விஜய் மிகவும் கோபமாக பேசினார். விஜய் இப்படி அரசியல் பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பிளவுபடுத்தும் அரசியலை செய்பவர்கள் தனது கொள்கை எதிரி எனவும், திராவிட அரசு என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து குடும்ப ஆட்சி செய்பவர்கள் தங்களின் அரசியல் எதிரி எனவும் விஜய் பேசினார்.

அதாவது, திமுகவை தனது அரசியல் எதிரி எனவும், பாஜகவை தனது கொள்கை எதிரி எனவும் விஜய் பேசினார். அதேநேரம், அவர் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பற்றி பேசவில்லை. மேலும், யாரை பற்றியும் திட்டி அரசியல் செய்ய தான் வரவில்லை எனவும், நாகரீகமான அரசியலே தனது ஸ்டைல் எனவும் பேசினார்.

அதோடு, கேரியரின் உச்சத்தில் இருக்கும் நிலையில் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்திருப்பதாகவும் அவர் பேசினார். விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடும் என அரசியல்வாதிகளே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருந்தகை ‘விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது. ராகுல் காந்தி வந்தபோதும் கூட்டம் கூடியது.. விஜயின் அரசியல் வருகை இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்’ என அவர் பேசியிருக்கிறார்.