வேந்தர் மூவிஸ் மதனின் நெருங்கிய நண்பர் கைது
பண மோசடி விவகாரத்தில் ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் நிறுவன் அதிபர் மதன் கூட்டாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
இதனையடுத்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகவும், மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 55 புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டிபிடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், வேந்தர் மூவிஸ் மதனின் நண்பர் பார்க்கவன் பச்சமுத்து திருச்சியில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பார்க்கவன் பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியின் மருத்துவ அணி செயலாளராக உள்ளார்.
மருத்துவக்கல்லூரி்யில் இடம்பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட புகாரில் பார்க்கவன் பச்சமுத்து கைது செய்யப்பட்டார்.