புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 மார்ச் 2021 (08:00 IST)

சீட் தராத அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட விசிக பிரமுகர்… கட்சியில் இருந்து நீக்கம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஒருவர் சுயேட்சையாக போட்டியிட்டதால் அவரைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது தலைமை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து 6 தொகுதிகளைப் பெற்று போட்டியிடுகிறது. இந்நிலையில் திட்டக்குடி அமைப்பு செயலாளர் திருமாறன் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்காக சுயேட்சையாக திட்டக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் இப்போது அவரைக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘விசிக மண்டல அமைப்புச் செயலாளர் திருமாறன் என்கிற அய்யாசாமி திட்டக்குடி (தனி) தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்பது கட்சித் தலைமையின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக அம்மனுவை திரும்பப் பெற வேண்டுமென அவருக்குத் தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அவர் அவ்வாறு திரும்ப பெறாமல் சுயேட்சை சின்னத்தைப் பெற்று வேட்பாளராக போட்டியிடுவது கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். அத்துடன், நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும், அரசியல் நேர்மைக்கும் எதிரான நடவடிககியாகும். கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாறன் கட்சியின் மண்டல செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுகிறார்.கட்சியின் பொறுப்பாளர்கள் எவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள திருமாறனுடன் கட்சி சார்ந்து எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.’ எனக் கூறியுள்ளார்.