இனி புயல் அதிக அளவில் தாக்கும்: விஞ்ஞானிகள் தகவல்
இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான வர்தா புயல் தீவிரமடைந்து தாக்கியதில் சென்னை சேதமடைந்தது. ஒரே நாளில் அதிகபட்சமாக 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் மரங்கள் அடியோடு சாய்தன.
மின்சார கம்பங்கள் சாய்து சென்னை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையில் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை தாக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அலகாபாத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் 2014-ம் ஆண்டு இதுதொடர்பாக ஆய்வு நடத்தி எர்த் சயின்ஸ் அறிவியல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், தொழிற்சாலைகளால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கக்கடல் பகுதியில் இனி வெப்ப மண்டல புயல்கள் அதிக அளவில் உருவாகும். கடந்த காலங்களில் உருவான புயலை விட, இனி வரும் காலங்களில் உருவாகும் புயல்களின் சக்தி அதிகரிக்கும்.
இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடலின் வெப்பம் அதிகரித்துள்ளதால், புயல் உருவாகுவது இனி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.