நான் இ-பாஸ் எடுக்கலைனா ஏன் நடவடிக்கை எடுக்கல? – உதயநிதி கேள்வி!
சாத்தான்குளம் செல்ல உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெற்றாரா என்பது குறித்த விவகாரத்தில் அரசுக்கு உதயநிதி ஸ்டாலினே கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மாதம் சாத்தான்குளத்தில் காவலர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் நேரில் சென்று இறந்தவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு சொன்னார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். சென்னையிலிருந்து சாத்தான்குளம் செல்ல அவர் முறையான இ-பாஸ் பெற்றாரா என்பது குறித்த கேள்வி எழுந்தது.
விதிமுறைகளின் படி இ-பாஸ் பெற்றே சென்றதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த பிறகும் கூட அவர் இ-பாஸ் காட்டவில்லை என இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேச்சாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் ”நான் இ-பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் அரசு என் மீது நடவடிக்கை எடுக்கலாமே! ஏன் எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட கூடாது என்பதற்காகவே தமிழக அரசு இன்னமும் இ-பாஸ் நடைமுறையை அமலில் வைத்திருப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.