1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (06:59 IST)

பேனர் கலாச்சாரம்: அறப்போர் இயக்கத்திற்கு உதயநிதியின் அதிரடி பதில்!

சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் பரிதாபமாக பலியானதை அடுத்து பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் அறப்போர் இயக்கம் எங்கெல்லாம் பேனர் வைக்கப்பட்டுள்ளதோ அதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருவதோடு, சம்பந்தப்பட்ட கட்சி தலைமைக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்து வருகின்றது
 
அந்த வகையில் திருவண்ணாமலையில் உள்ள நெடுஞ்சாலையில் திமுகவினர் சாலையின் குறுக்கே பேனர் வைக்கப்பட்டதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் ’திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் திமுக கூட்டத்திற்கு நெடுஞ்சாலையில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் சாலையில் பிரயாணம் செய்பவர்கள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இந்த சாலை வளைவு அமைத்த அந்த கொலைகார கட்சி பிரமுகரை எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 
 
இந்த நிலையில் இந்த டுவீட்டுக்கு ஒருசில நிமிடங்களில் பதிலளித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ‘எங்கள் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் அந்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்ற தகவலை அறப்போர் இயக்க தோழர்களின் பார்வைக்கு தெரியப்படுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் பேனர்கள் அகற்றப்பட்டதை புகைப்படம் எடுத்தும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். உதயநிதியின் இந்த பதிவுக்கு அறப்போர் இயக்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது