பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம்..! அரசுக்கு நிதியிழப்பு செய்த புகாரில் நடவடிக்கை..!!
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு நிதியிழப்பு செய்த இரண்டு பெண் ஊராட்சி மன்ற தலைவர்களை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தவர் கீதா துளசிராமன். இவர் சட்ட விதிகள் மீறி கட்டிட வரைப்படம் அனுமதி அளித்தது தெரியவந்தது.
மேலும் முறையற்ற தீர்மானங்கள் ஏற்றியதும், ஊராட்சிக்கு வரவேண்டிய தொகையை காலதாமதமாக செலுத்தியதும், ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு செய்ததும் கண்டறியப்பட்டதால், அவரை பதவி நீக்கம் செய்து திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் பாமக ஊராட்சி மன்ற பெண் தலைவர் சுனிதா பாலயோகி, அரசுக்கு வரவேண்டிய 19 லட்சத்து 42 ஆயிரத்து 171 ரூபாய் பணத்தை அரசுக்கு செலுத்தாமல் நிதியிழப்பு செய்தது கண்டறியப்பட்டதால் அவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11) இரு ஊராட்சி மன்ற பெண் தலைவர்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.