வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2025 (18:45 IST)

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

Vijay Vs Seeman

விஜய்க்கு பணக்கொழுப்பு இருப்பதால் அரசியல் ஆலோசகர் வைப்பதாக சீமான் பேசியதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடுமையான எதிர்வினையாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய் - அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சீமான், பணக்கொழுப்புதான் சந்திப்புக்கு காரணமாக உள்ளது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றி அறிக்கை வெளியிட்டு தவெக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பந்த்குமார் “ஊடகவியாலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமக்கால அரசியல் சமூக சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துக் கொள்ளாமல் பணக்கொழுப்பு என்று பகிரங்கமாக பேசியுள்ள அண்ணன் சீமானுக்கு அரசியல் யதார்த்தம் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

 

மேலும், திரள்நிதி வாங்குவதை வழக்கமாக கொண்ட அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவதில் ஆச்சர்யமில்லை என்றும், நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்வதாகவும், ஆனால் சீமானோ பட்டிமன்றத்தில் பேசுவதை அரசியல் என நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் அதில் விமர்சித்துள்ளார்.

 

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் சமீபமாக நாம் தமிழர் - தவெக இடையே ஏற்பட்டு வரும் இந்த மோதல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K