திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (13:09 IST)

ஆர்.கே.நகருக்கு நன்றி தெரிவிக்க தினகரன் செல்லவில்லை : இதுதான் காரணமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்பும், அந்த பகுதி மக்களுக்கு நன்றி சொல்ல டிடிவி தினகரன் இன்னும் செல்லவில்லை.

 
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். 
 
தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்தே இந்த வெற்றியை பெற்றுள்ளது என அதிமுக, திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியது. ஆனால், தினகரன் தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்தது.
 
அந்நிலையில், தன்னை வெற்றியடைய வைத்த ஆ.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இதுவரை தினகரன் செல்லவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தினகரன், இன்னும் சில நாட்கள் கழித்து செல்வேன் எனக் கூறியிருந்தார்.

 
இந்நிலையில், அதற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகிறது. தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைக்க முடியாமல் மத்திய அரசு, தமிழக அரசு, தேர்தல் ஆணையம் என அனைவரும் செக் வைத்தால், 20 ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு கொடுத்து, தினகரன் வெற்றி பெற்ற பின், ரூ.10 ஆயிரமாக திருப்பி தரப்படும் என தினகரன் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி பரவியது. 
 
சமீபத்தில் கூட எங்களுக்கு ஏன் 20 ரூபாய் நோட்டு டோக்கனை எங்களுக்கு அளிக்கவில்லை என சிலர் தினகரன் ஆதரவாளர்களிடம் முறையிட, வாக்குவாதம் முற்றி கைகலப்பாகி, அந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. 
 
இந்நிலையில், பலருக்கும் தினகரன் தரப்பு வாக்குறுதி அளித்தபடி பணப்பட்டுவாடா இன்னும் செய்யப்படவில்லை எனவும், இதனால், அப்பகுதி மக்கள் கோபத்தில் இருப்பதாகவும், அதனால்தான் தினகரன் தற்போது நன்றி தெரிவிக்க அங்கு செல்லவில்லை எனவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.