அன்புமணி ராமதாஸ் ஜனநாயக போராட்டத்தை ஒடுக்குவதா? டிடிவி தினகரன் கண்டனம்..!
அன்புமணி ராமதாஸ் ஜனநாயக போராட்டத்தை ஒடுக்குவதா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக என்.எல்.சி. நிறுவனம் நெல் வயலை அழித்து கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஜனநாயக முறைப்படி மேற்கொண்ட போராட்டத்தை ஒடுக்க முயன்ற தமிழ்நாடு அரசின் செயல் கண்டனத்திற்குரியது.
ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை முறையாகக் கையாளாமல் காவல்துறையை ஏவி, தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு நினைப்பது நியாயமல்ல.
அதே நேரத்தில், ஜனநாயக முறைப்படி நடத்திய போராட்டத்தில் உணர்ச்சிவசம் கொண்டு காவல்துறையினர் மீது பா.ம.க தொண்டர்கள் கல் எறிந்ததாக வந்த செய்தியும் துரதிஷ்டவசமானது.
விவசாயிகளின் உணர்வை மதித்து அவர்களின் கோரிக்கையின்படி நிலத்தை திருப்பி தருவதற்கோ அல்லது நிலம் கையகப்படுத்துவதைக் கைவிடவோ நடவடிக்கை எடுக்காமல் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல் துறையும் செயல்படுவது ஏற்புடையதல்ல.
இந்த விஷயத்தில் நெற்பயிர் விளைந்த நிலத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாய் தோண்டியது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
என்.எல்.சி.க்கு ஆதரவாக செயல்படாமல் விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே இந்த நேரத்தில் அவசியமான செயலாகும்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை எந்தவித பாரபட்சமுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
Edited by Mahendran