ஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் பேசியிருந்த சோடா பாட்டில் வீசத்தெரியும் என்ற பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டாள் பற்றி தவறான விமர்சனம் செய்தவர்களை கண்டிக்கிறோம் என்ற பெயரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் அவர்கள் பேசியிருக்கும் பேச்சுக்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
சராசரி மனிதர்களுக்கும் ஜீயர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களுக்கும் இடையேயான வித்தியாசமே வன்முறைகளற்ற சாத்வீகமும், கருணை உள்ளம் கொண்ட ஆன்மீகப் பணிகளும்தான்.
ஆனால் இந்த வேறுபாட்டை தகர்த்து, அதன்மூலம் ஆன்மீகத்திற்கே அவப்பெயர் உண்டாக்கும் விதமாக “எங்களுக்கும் கல்லெறியத் தெரியும்... சோடா பாட்டில் வீசத்தெரியும்” என்றெல்லாம் பேச்சளவிற்குக் கூட ஒரு ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர் பேசுவது ஏற்புடையது அல்ல... கண்டிக்கத்தக்கதும் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.