விக்கெட் எடுத்ததால் விபரீதம்.. இளைஞரை ஸ்டம்ப்பால் அடித்துக் கொன்ற சிறுவன்! – திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
கிரிக்கெட் விளையாடியபோது விக்கெட் எடுத்தது தொடர்பான வாக்குவாதத்தில் 23 வயது இளைஞரை 15 வயது சிறுவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள புது காலணி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் 23 வயதான அஜித்குமார். தற்போது பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலம் என்பதால் பலரும் வயல்வெளிகளில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அஜித்குமாரும் அப்படியாக அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
அப்போது அஜித்குமார் வீசிய பந்தில் 15 வயது சிறுவன் ஒருவன் விக்கெட் இழந்ததாக கூறப்படுகிறது. விக்கெட் தொடர்பாக அஜித்குமாருக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிறுவன் அருகில் இருந்த ஸ்டம்ப்பை எடுத்து அஜித்குமாரின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அஜித்குமாரை உடனே நன்னிலம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 15 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K