வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (19:02 IST)

போலீசார் மீது தாக்குதல் : சீமான் மீது கொலைமுயற்சி வழக்கு

நேற்று சென்னை வாலஜா சாலையில் போலீசாரின் மீது தாக்குதல் தொடுத்த விவகாரத்தில் நாம் தமிழர் சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வாலஜா சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சீமான், கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், ராம் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மேலும், நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  
 
அப்போது அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதில் இயக்குனர் வெற்றிமாறன் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே கலவர களமானது. போலீசார் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்திய வீடியோக்களும் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், காவலர்களை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபசமாக பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், போராட்டத்தின் போது எஸ்.ஐ உட்பட 3 காவலர்களை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். இன்னும் சிலரையும் அவர்கள் தேடி வருகின்றனர்.
 
நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்ட காவலர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.