கோவில்கள் 10 மணி வரை, திரையரங்கில் கூடுதல் காட்சி! – தமிழக அரசு அளித்த தளர்வுகள்!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் அக்கட்டுப்பாடுகளில் பலர் சில கோரிக்கைகளை முன்வைத்ததால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தமிழகம் முழுவதும் கோவில்கள், மசூதிகள் ஆகிய வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம் என அளிக்கப்பட்ட நேரம் தற்போது இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழாக்கள் கொண்டாடவும் தடை தொடர்கிறது.
அதேபோல திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியானால் முதல் 7 நாட்கள் மட்டும் கூடுதல் காட்சிகள் திரையிடப்படலாம் என்றும் அதேசமயம் அனைத்து காட்சிகளும் 50 சதவீத பார்வையாளர்களோடே நடக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பொதுமக்கள் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.