திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2024 (12:55 IST)

காங்., திமுகவை அடிக்க இதுதான் சரியான ஆயுதம்.. கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்த பிரதமர் மோடி!

Annamalai Modi
தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.



மக்களவை தேர்தலின் முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெறும் நிலையில் இந்த முறை தமிழ்நாட்டில் கணிசமான தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என மத்திய பாஜக முயற்சித்து வருகிறது.

இதற்காக காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள், இலங்கை தமிழர் படுகொலை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.

சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கச்சத்தீவு குறித்த ஆவணங்களை பெற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு எப்படி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளதாக கூறியிருந்தார்.

தற்போது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அந்த தகவல் சார்ந்த செய்தியை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “கண் திறந்து திகைக்க வைக்கிறது! #கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அநாகரிகமாக கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது மற்றும் மக்கள் மனதில் மீண்டும் காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

 
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதில் காங்கிரஸின் 75 ஆண்டு கால ஆர்வம் தொடர்ந்து வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “50 வருடமாக திமுக செய்து வரும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தின் சாயம் வெளுத்தது. அன்று காங்கிரஸுடன் இணைந்து நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்த கூட்டம் இன்று பிரிவினை வாதம் பேசுகிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பாஜகவின் முக்கிய புள்ளிகள் கச்சத்தீவு விவகாரத்தை இழுத்து பேசுவதன் மூலம் தமிழ்நாடு அரசியலில் இந்த விவகாரத்தை காங் – திமுக கூட்டணிக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K