தஞ்சை காங்கிரஸ் தலைவருடன் தனியாக சென்று பேசிய அண்ணாமலை! – என்ன காரணம்?
தஞ்சாவூரில் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அங்கு பிரபலமான தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்து பேசியுள்ளார்.
தஞ்சையில் பிரபலமான வாண்டையார் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட தொண்டு நிறுவனம் தொட்டு பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருபவர் கிருஷ்ணசாமி வாண்டையார். இவர் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்களது குடும்பம் பாரம்பரியமாக காங்கிரஸ் பிண்ணனியை கொண்டவர்கள். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் சம்மந்திதான் கிருஷ்ணசாமி வாண்டையார்.
தற்போது டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை திருவையாறில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார்.
இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்ட பின் கிருஷ்ணசாமியும், அண்ணாமலையும் மட்டும் தனியாக சில நிமிடங்கள் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை “நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை காண வேண்டும் என இருந்தேன். இன்று அதற்காக வந்துள்ளேன். இவர்களது குடும்பம் மீது எங்களது தலைவர்களுக்கு பெரும் மரியாதை உண்டு. இந்த சந்திப்பை அரசியல் வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K