திருப்பரங்குன்றம் மலை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதுமாக இந்துக்களுக்கே சொந்தமானது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
திருப்பரங்குன்ற மலையடிவாரத்தில் முருகபெருமான் கோயில் உள்ள நிலையில், மலைமீது காசி விஸ்வநாதர் கோயில், சமணர் குகை, சிக்கந்தர் தர்கா உள்ளிட்டவையும் அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிட முயன்றபோது தடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதியில் சிலர் சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்ததால் மேலும் பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது என இந்து, இஸ்லாமியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா “1931 பிரிட்டிஷ் நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை முழுவதுமாக இந்துக்களுக்கு சொந்தமான ஒரு மலை. இதில் யார் இந்த சிக்கந்தர்? அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை இடிக்கத்தான் வந்தார் என்றும், மக்கள் அவரை அடித்து விரட்டினர் என்றும் இப்போதும் மக்களிடையே ஒரு பேச்சுவழக்கு உள்ளது.
பாபர் மசூதி விவகாரத்திலும் தொல்லியல் ஆய்வுகள் அடிப்படையிலேயே அது ராமர் கோவிலுக்கான இடம் என்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது சென்னையில் செயிண்ட் தாமஸ் சர்ச் உள்ள இடத்தில் கபாலி கோவில் இருந்ததை திருமாவளவனே ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மதநல்லிணக்கத்தை விரும்புபவர்கள் மலை மீதுள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதுதானே” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K