புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (11:28 IST)

தாய் பாசத்துல நம்மள மிஞ்சிடுவான் போல..! – பட காமெடியை நிஜமாக்கிய திருடன்!

மன்னார்குடியில் சிறையில் அடைக்கப்பட இருந்த திருடன் தன் குடும்பத்தை பார்க்க செல்வதாக கூறி தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேலு, அர்ஜுன் இருவரும் போலீஸாக நடித்த ஒரு படத்தில் திருடன் ஒருவனை நீதிமன்றம் அழைத்து செல்வார்கள். அப்போது தன் தாயை பார்க்க வேண்டுமென திருடன் அழுது புலம்ப, அதனால் மனமிறங்கிய அவர்கள் அவனை வீட்டிற்கு அழைத்து செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அந்த திருடன் தப்பி விடுவான்.

பிரபலமான இந்த திரைப்பட காமெடி போன்ற ஒரு சம்பவம் மன்னார்குடி அருகே நடந்துள்ளது. மன்னார்குடி அருகே உள்ள கன்னியாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான அப்பு. இவர் மீது பல காவல் நிலையங்களில் பைக் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. சமீபத்தில் பிடிபட்ட இவரை போலீஸார் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

அவருடைய நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் ஆஜர்படுத்த நாகப்பட்டிணத்தில் இருந்து மன்னார்குடி நீதிமன்றத்திற்கு காரில் அழைத்து வந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் அவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளனர். இதனால் தான் ஒரேஒருமுறை தனது தாயையும், குடும்பத்தையும் பார்க்க வேண்டும் என காவலர்களிடம் கெஞ்சியுள்ளார் அப்பு. அவரது கெஞ்சலுக்கு மனமிறங்கிய போலீசார் அவரை கன்னியாகுறிச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். காவலர்கள் வீட்டு வாசலில் நிற்க உள்ளே சென்ற அப்பு நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் உள்ளே சென்று பார்த்தபோது பின்வாசல் வழியாக அப்பு தப்பிவிட்டது தெரிய வந்துள்ளது. திரைப்பட காமெடி போல நடந்த இந்த உண்மை சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.