கவரிங் நகையை திருடி கம்பி எண்ணும் திருடன்! – விருதுநகரில் விநோத சம்பவம்!
விருதுநகரில் தங்க நகை என நினைத்து கவரிங் நகையை திருடி திருடன் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணவேணி என்ற பெண் காலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்த கிருஷ்ணவேணி தனது 3 பவுன் நகையை திருடன் திருடி சென்றதாக கூறியுள்ளார்.
உடனே நடவடிக்கை எடுத்த காவல்துறை சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடன் அலெக்ஸ் ப்ரேம் என்று கண்டறிந்து அவரை பிடித்துள்ளனர். ஆனால் அலெக்ஸ் ப்ரேம் தான் திருடியது உண்மைதான் ஆனால் அது தங்க நகை இல்லை என காவலர்களிடம் கெஞ்சியுள்ளார். பின்னர் அவர் நகையை வீசிய இடத்தில் சோதனை செய்ததில் அது கவரிங் நகை என தெரிய வந்துள்ளது.
தங்க நகை என பொய்யான புகார் அளித்த கிருஷ்ணவேணியை எச்சரித்து அனுப்பிய போலீஸார், திருடன் அலெக்ஸ் ப்ரேம் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கவரிங் நகையை திருடி திருடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.