ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (19:32 IST)

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

Naiyanar Nagendran
ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜகவின் நயினார் நாகேந்திரன் மே இரண்டாம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
 
மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை எழுத்து மூலமாக அளித்தனர்.

 
இந்நிலையில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மே இரண்டாம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.