திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2024 (14:53 IST)

முதலீடுகள் குவிவதாக மாயத்தோற்றம்.! தமிழகம் பெற்ற தொழில் முதலீடுகள் எவ்வளவு? - அன்புமணி சரமாரி கேள்வி.!

Anbumani Stalin
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2024-25ஆம் நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், ரூ.8,325 கோடி முதலீட்டுடன் தமிழ்நாடு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு மேலும் இரு இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனை தமிழ்நாடு இழந்து வருவது உறுதியாகியிருக்கிறது.
 
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மராட்டிய மாநிலம் மொத்தம் ரூ.70,795 கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. கர்நாடகம், தில்லி, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிக முதலீட்டை ஈர்த்திருக்கின்றன. முதலிடம் பிடித்துள்ள மராட்டியம் ஈர்த்துள்ள முதலீட்டில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது என்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 
இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 8.8% ஆகும். அதன்படி பார்த்தால் இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு குறைந்தது 8.8% ஆக இருந்திருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு ரூ.19 லட்சத்து 21,607.72 கோடி ஆகும். அதில், ஒரு லட்சத்து 69,101 கோடி ரூபாயை ஈர்த்திருக்க வேண்டிய தமிழ்நாடு, கிட்டத்தட்ட அதில் பாதி அளவான ரூ.92,569 கோடியை மட்டுமே ஈர்த்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் திறனுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு ஆகும்.
 
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் தொழில் முதலீடு அதிகரித்து விட்டது போன்ற பொய்யான பிம்பத்தை விளம்பரங்களின் மூலம் தமிழக அரசு ஏற்படுத்த முயல்கிறது. ஆனால், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 39 மாதங்களில் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு வெறும் ரூ.68,145 கோடி மட்டுமே. இது எந்த வகையிலும் பெருமைப் படுவதற்கு ஏற்ற முதலீடு அல்ல.
 
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலாக தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தின் தொழில் முதலீடு என்பது பெரும்பாலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டையே சார்ந்திருக்கின்றன. திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு முதலீடுகளின் அளவு ரூ.ரூ.68,145 கோடி மட்டும் தான். இதில் பாதியளவுக்கு உள்நாட்டு முதலீடு கிடைத்ததாக வைத்துக் கொண்டாலும், தமிழகத்தின் மொத்த தொழில் முதலீட்டு வரவு ரூ. 1 லட்சம் கோடி என்ற அளவில் தான் இருக்கும்.
 
ஆனால், இந்த உண்மை நிலையை மறைத்து தமிழ்நாட்டுக்கு ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடு வந்து குவிந்து விட்டதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டதைப் போன்றும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பொய்ப் பரப்புரையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக மாயத் தோற்றம் ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே மராட்டியம், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 

 
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.