பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது.! ஆளுநர் ஆர்.என் ரவி குற்றச்சாட்டு.!!
பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை, கிண்டி ராஜ்பவனில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தில் சேர முதலில் கையெழுத்து போட ஒப்புதல் அளித்த தமிழக அரசு தற்போது, அந்த திட்டத்தை ஏற்க மறுக்கிறது என்று தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது என்றும் இதன் மூலம் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கற்றல் பணிகளின் திறன் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
வருங்கால சமூகத்தினரை கருத்தில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்ட தமிழக ஆளுநர், பல்வேறு மாநிலங்கள் புதிய கல்வி கொள்கை திட்டத்தை ஏற்றுக்கொண்டன என்றும் சில மாநிலங்கள் மெல்ல, மெல்ல ஏற்று கொண்டு வருகின்றன என்றும் புதிய கல்வி கொள்கைக்கு மாற்று கிடையாது என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு, மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது என்று அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையை அரசு உருவாக்கவில்லை என்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் தான் உருவாக்கி உள்ளனர் என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார்.