ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (09:05 IST)

திமுக படுதோல்வியை சந்திக்கும்; சாரிப்பா.. ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்! – அசடு வழிந்த தங்க தமிழ்செல்வன்!

உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து சமீபத்தில் பேசிய தங்க.தமிழ்செல்வன் திமுக தோல்வியை சந்திக்கும் என பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அரசின் இந்த செயலுக்கு திமுகவினர் பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் ஊடகங்களுக்கு பேசிய திமுக தேனி மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்செல்வன் “உதயநிதி ஸ்டாலினை கைது செய்தாலும் தடைகளை மீறி அவர் வெற்றிகரமாக பிரச்சாரம் செய்வார். எதிர்வரும் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்” என கூறினார். இதனால் உடனிருந்த மற்ற திமுகவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உஷாரான தமிழ்செல்வன் “அதிமுக படுதோல்வியடையும்” என கூறிவிட்டு தான் பேசியதை அப்படியே போட்டு விட வேண்டாம் என நிருபர்களிடம் அசடு வழிந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் “ரொம்ப நாளா அதிமுகவில் இருந்தபடி திமுகவை திட்டியே பழகிவிட்டதால் தங்கத்துக்கு திமுக என்றாலே தோல்விதான் நியாபகம் வருகிறது போல” என கிண்டலாக பலர் பேசி வருகின்றனர்.