ஒரே ஒரு வேண்டுகோள்: உடனே டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சர் ஜெயகுமார்!
மக்கள், அரசியல் கட்சிகள் என பலவித போராட்டங்கள் நடத்தியும் டாஸ்மாக் கடையை மூடாத தமிழக அரசு ஒரு கடையை ஒரே ஒருவரின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக மூடியுள்ளது
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள நமச்சிவாய தெருவில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் எந்த நேரமும் குடிமக்கள் நிரம்பி இருப்பார்கள். இந்த கடைக்கு அருகில்தான் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் குழாய் உள்ளது. குடிமக்கள் இரவு 11 மணி வரை இந்த பகுதியில் நடமாடுவதால் பெண்கள் இந்த குழாயில் தண்ணீர் பிடிக்க அச்சப்பட்டனர். மேலும் குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் வாங்கிய பாட்டில்களை அங்கேயோ போட்டுவிட்டு செல்வதால் குழாய் இருக்கும் பகுதி எப்போதும் அசுத்தமாகவே இருந்தது.
இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் நாராயணன் என்பவர் சமீபத்தில் அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் வேண்டுகோள் விடுத்த அடுத்த சில மணி நேரங்களில் அந்த கடை மூடப்பட்டது. அமைச்சர் ஜெயகுமார் இவ்வாறு அதிரடி முடிவெடுக்க காரணம், அந்த வேண்டுகோளை விடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர், ஜெயகுமார் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு பாடம் எடுத்த அறிவியல் ஆசிரியராம். தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து உடனடியாக டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது