திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (12:18 IST)

படம்தான் வரல.. ஐபிஎல் போட்டு விடுவோம்! – தியேட்டர் உரிமையாளர்கள் புது பிளான்!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ள சூழலில் திரையரங்குகளில் ஐபிஎல் ஒளிபரப்ப திரையரங்க உரிமையளர்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளில் தயாரிப்பாளர்களுக்கு பங்களிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கோரிக்கைகளுக்கு உடன்படாத பட்சத்தில் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படாது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு திரையரங்க உரிமையாளர்களும் படம் ரிலீஸ் செய்ய விருப்பம் இல்லாவிட்டால் போங்கள் என்ற ரீதியில் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை மறுத்து புதிய கோரிக்கைகள் கொண்டு வர திரையரங்க உரிமையாளர் சங்க கூட்டம் 15ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் வெளியாகி ஒரு வருடம் குறித்தே ஓடிடிக்கு அவற்றை விற்க வேண்டும், க்யூப் கட்டணத்தை தயாரிப்பாளர்களே செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்படுத்த உள்ளதாகவும், மேலும் தற்போது திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகததால் ஐபிஎல், ஒலிம்பிக் போட்டிகளை திரையரங்கில் ஒளிபரப்ப மத்திய அரசின் அனுமதியை கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.