புயல் எச்சரிக்கை; மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்!
தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடக்க உள்ள சூழலில் முன்னதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற உள்ள நிலையில் நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலால் பல மாவட்டங்களில் கனமழையும், காற்றும் வீசக்கூடும் என்பதால் புயல் பாதிப்புகள் உள்ள தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்படும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில் தற்போது விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து சேவைகளும் நிறுத்தப்படுவதாகவும், பாதிப்பு அறிகுறியுள்ள மாவட்டங்கள் வழியாக எந்த பேருந்து சேவையும் இருக்காது என்றும் அரசு அறிவித்துள்ளது.