செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:31 IST)

தமிழக மீனவர்கள் கைது.! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

Stalin
மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால்  சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451, IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21.09.2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஆழ்ந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
தான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர், கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 
 
அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 


கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.