கர்நாடகாவில் இருந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பி வந்த தமிழர்கள்!
காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களின் உடைமைகளும் அடித்து நெருக்கப்பட்டன.
இதனால் கர்நாடகாவில் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இதை அடுத்து, தமிழர்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள, கர்நாடகாவில் இருந்து வெளியேறி தமிழகம் வருகின்றனர்.
இதுகுறித்து ரயில் டிக்கெட் பரிசோதகர் ஏ.சி.சாமுண்டி என்பவர் கூறியதாவது, ”கர்நாடகத்தில் கலவரம் காரணமாக அங்குள்ள தமிழக ஓட்டல்கள் தாக்கப்பட்டு உள்ளன. பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளதால், ரெயில்கள் மூலம் தமிழர்கள் சென்னை வந்த வண்ணம் உள்ளனர். கர்நாடகாவில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தும் கூட்டமாக காணப்படுகிறது. அதேவேளையில் கர்நாடகாவுக்கு செல்ல தமிழர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கல்வி, தொழில் உள்பட பல்வேறு காரணங்களுக்காக கர்நாடகம் செல்ல ரெயிலில் முன்பதிவு செய்திருந்த 450 பேர் தங்களது டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர். எனவே முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளில் பயணம் செய்யும் பயணிகள், கூடுதல் கட்டணம் செலுத்தி முன்பதிவு இருக்கைகளில் பயணம் செய்யலாம்.” என்றார்.