வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (11:12 IST)

மண்ணைக் கவ்விய வேதாந்தா: ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
 
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்று வந்தது. இரு தரப்பின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வெளியாகியது.
 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்ல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை, தமிழக அரசாணையை எதிர்க்கவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு உரிமையில்லை.  இனி ஸ்டெர்லைட் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இவ்வழக்கை சந்தித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.