செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 9 மே 2016 (10:44 IST)

ஸ்டாலின் மகனாக பிறந்தது நான் செய்த புண்ணியம் - கருணாநிதி

ஸ்டாலின் எனக்கு மகனாக பிறந்தது நான் செய்த தவப்புண்ணியம் தான் என்று எண்ணிக்கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகே பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கருணாநிதி, துறைமுகம், ராயபுரம், வில்லிவாக்கம், எழும்பூர், திரு.வி.க.நகர் ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் கருணாநிதி, ‘’ஸ்டாலின் இன்று மேடைக்கு வரவில்லை. ஊரெல்லாம் சென்று உதய சூரியனுக்கும், கை சின்னத்திற்கும் வாக்கு கேட்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதால் மு.க.ஸ்டாலின் இங்கே இல்லை, அவர் இல்லாவிட்டாலும் அவருக்கு பதிலாக நான் இங்கே இருக்கிறேன். 
 
ஸ்டாலின் என் மகன் என்பதற்காக சொல்லவில்லை. மகனாக இல்லாவிட்டாலும் திமுகவின் சாதாரண தொண்டன் என்ற அளவில் அவர் ஆற்றும் பணி என்னையே பொறாமைகொள்ள செய்கிறது. என் மகன் மீது எனக்கு பொறாமை வருகிறது என்றால், சிறுவயதில் நான் இந்த இயக்கத்திற்காக உழைத்ததை விட 100 மடங்கு மேலாக மு.க.ஸ்டாலின் அந்த பணியை ஆற்றி வருகிறார். 
 
அவர் எனக்கு மகனாக பிறந்தது நான் செய்த தவப்புண்ணியம் தான் என்று எண்ணிக்கொள்கிறேன். அப்படிப்பட்ட மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 
 
ஆர்.கே.நகரில் யார் யாருக்கெல்லாம் போட்டி என்பது உங்களுக்கு தெரியும். அங்கே சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற உங்கள் அன்பான வாக்குகளை அள்ளி அள்ளி வழங்குங்கள். துள்ளித்திரிபவர்களை அடக்க உதயசூரியனுக்கு வாக்குகளை வழங்குங்கள்” என்று கூறியுள்ளார்.