வனப்பகுதியில் கடும் வறட்சி..! இடம்பெயரும் காட்டு யானைகள்..!!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பகல் நேரங்களில் நிலவி வரும் கடும் வெயிலால் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக கேரளா, கர்நாடகா வன பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன...
தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா புலிகள் சரணாலயம் ஆகிய மூன்று புலிகள் காப்பகங்கள் மூன்று மாநில எல்லையில் ஒன்றிணைந்த வனப்பகுதியாக அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம்.
தற்போது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் காட்டு யானைகள் தங்களது குட்டிகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக கேரளா மற்றும் கர்நாடகா வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்ல துவங்கி உள்ளது.
தற்போது இடம்பெயர்ந்து செல்லக்கூடிய இந்த யானைகள் மே, ஜூன் மாதங்களில் மழை துவங்கி பிறகு மீண்டும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் வரத்துவங்கும்.
சிகூர் பள்ளத்தாக்கில் உள்ள வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர், தெங்குமரஹாடா வனப்பகுதியை நோக்கி செல்ல துவங்கி உள்ளது.
இருப்பினும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகள் தேவையான தண்ணீர் லாரி மூலம் நாள்தோறும் எடுத்துச் சென்று தொட்டிகள் அமைத்து ஊற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.