திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (12:04 IST)

பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் ; உறவும் வேண்டாம் : பொங்கியெழுந்த செல்லூர் ராஜூ

பாஜகவுடன் இணக்கமாக சென்றதால்தான் ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி அடைந்தது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த விவகாரம் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவை பாஜக மேலிடமே கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்கிறது என மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியே ஆர்.கே.நகரில் எதிரொலித்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், நேற்று மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டதில் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய செல்லூர் ராஜூ “பாஜகவுடன் அதிமுக இணக்கமாக இருப்பதால்தான் ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவியுள்ளோம்.  அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டோம். இனிமேல், பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம். உறவும் வேண்டாம் என்ற ஜெ.வின் நிலைப்பாடை கையில் எடுப்போம்.
 
பாஜகவை எதிர்த்ததால்தான் ஆர்.கே.நகரில் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஓட்டுகள் அனைத்தும் தினகரனுக்கு சென்றுவிட்டது” எனப் பேசியுள்ளார்.
 
பாஜகவுடன் இணக்கமாக இருந்தால்தான் மத்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும் என சில நாட்களுக்கு முன்பு செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.