வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (12:52 IST)

ஆன்லைனில் மது விற்பனையா.? டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி விளக்கம்..!

Tasmac
ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய திட்டமில்லை என்றும் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமில்லை என்றும் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
 
தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன்படி படிப்படியாக மதுபானக்கடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 500 கடைகள் வரை மூடப்பட்டுள்ளன.

மேலும் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு வருகிறது. மதுபானக்கடைகளுக்கு பதிலாக கள்ளுக்கடைகளை திறக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 100 மிலி கொண்ட டெட்ரா மதுபான பாக்கெட்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

அதேபோல் ஸ்விக்கி, சொமேட்டோ மற்றும் பிக்பாஸ்கெட் போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் ஆல்கஹால் குறைந்த மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  வீட்டிற்கு வந்து விற்பனை செய்யப்பட்டால் மது அருந்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று வருத்தம் தெரிவித்தனர்.

 
இந்நிலையில் ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் இறங்க திட்டம் இல்லை என்றும் இதேபோல் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமில்லை என்றும் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.