தேர்தல் தோல்வி – தினகரன் மீது அதிருப்தியில் சசிகலா ?
மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தனியாகப் போட்டியிட்ட அமமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து அமமுக தலைவர் சசிகலா தினகரன் மீது வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுக, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. முகவர்களின் வாக்குகள் கூடவா எங்களுக்கு விழவில்லை என டிடிவி தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனாலும் தொண்டர்கள் சோர்வடையக் கூடாது என்பதற்காக அரசியலில் ஒரே நாளில் எதையும் சாதித்து விட முடியாது. எங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தினகரன் எவ்வளவுதான் நம்பிக்கையூட்டும் படி பேசினாலும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகப்பெரிய அதிர்ச்சியிலும் அவநம்பிக்கையிலுமே இருக்கின்றனர்.
இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின் சசிகலாவை தினகரன் இன்னும் சென்றுப் பார்க்கவில்லை. ஆனால் சசிகலாவை சென்று பார்த்த மற்ற நிர்வாகிகளிடம் சசிகலா தினகரன் மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இந்த செய்தி தினகரன் காதுக்கும் வரவே அவர் பயங்கர அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.