திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (12:35 IST)

வீடியோவில் யாரோ டப்பிங் கொடுத்திருக்கிறார்கள் : அந்தர் பல்டி அடித்த சரவணன் எம்.எல்.ஏ

தன் பெயரில் வெளியான வீடியோ போலியானது எனவும், தன்னைப் போலவே யாரோ டப்பிங் பேசியிருக்கிறார்கள் என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.


 

 
கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது, ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக வாக்களிப்பதற்காக, அவர்களிடம் சசிகலா தரப்பு பல கோடி பேரம் பேசியதாக நேற்று டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சி ஆகியவை ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டன. மேலும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், சசிகலா தரப்புடன் பேரம் பேசும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது “அதிமுக எம்.எல்.எக்கள் அனைவரிடமும் எந்த காரணத்தையும் கூறாமல்தான் சசிகலா தரப்பு கூவத்தூருக்கு அழைத்து சென்றது. அங்கு சென்ற பிறகுதான் அவர்களின் நோக்கம் எனக்கு புரிந்தது. அப்போது, என் தொகுதி மக்கள் என்னை தொலைப்பேசியில் அழைத்து, ஓபிஎஸ் அணியோடு இணையுங்கள் என கூறினார்கள். எனவே, அவர் பக்கம் நான் சென்றுவிட்டேன்.
 
இந்நிலையில்தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பேசுவது நான் இல்லை. என்னைப் போலவே யாரோ டப்பிங் பேசி வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் யாரிடம் நான் பேரம் பேசவில்லை. பணமும் வாங்கவில்லை. இதுபோன்ற பொய்யான தகவலை ஏன் பரப்புகிறார்கள் என எனக்கு தெரியவில்லை. நான் தொடர்ந்து ஓ.பி.எஸ் அணியில்தான் இருப்பேன். இல்லாவிட்டால் ராஜினாமா செய்து விடுவேன். இதுவே உண்மை” எனக் கூறினார்.