வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (16:52 IST)

அனைத்து விதமான ஃபென்சிங் எனும் வாள் வீச்சு சண்டை போட்டிக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக கோவையை சேர்ந்த சரவணன் தேர்வு!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியை முடித்து கோவை திரும்பிய சரவணனுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு  போட்டியில் ,பாயில், சேபர், எப்பி' ஆகிய மூன்று பிரிவின் கீழ்,  போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள இந்த போட்டியை,தற்போது தமிழகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருவதோடு, தேசிய அளவில் சாதித்தும் வருகின்றனர்.
 
இந்நிலையில் கோவை  மாவட்ட வாள்வீச்சு சங்கத்தில் பயிற்சி பெற்ற சரவணன் , 
தேசிய விளையாட்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று  ஏ கிரேட் பயிற்சியாளர் எனும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக  தகுதி பெற்று  கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
 
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கல்வி சார்  பிரிவாக  செயல்படும் பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நகரில் உள்ள  நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் நடத்திய தேர்வில் சரவணன் கலந்து கொண்டார்.
 
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 60 பேர் கலந்து கொண்ட இதில்,  கோயம்புத்தூர் மாவட்ட வாள்வீச்சு சங்கத்தில் பயிற்சி பெற்ற சரவணன்,தேர்வாகி,
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட
பயிற்சியாளராக பணியாற்ற  தகுதி பெற்றார்.
 
இந்நிலையில் கோவை திரும்பிய வாள் வீச்சு  பயிற்சியாளர் சரவணனுக்கு இரயில் நிலையத்தில் கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கம் சார்பாக  உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
 
இதில்,  கோவை மாவட்டம் வாள்வீச்சு சங்கத்தின் செயலாளர்  தியாகு நாகராஜ், பொருளாளர்  சிவமுருகன் மற்றும் உறுப்பினர்கள் அரவிந்த், விது ஷங்கர், விமல், பிரசாந்த், பவிலாஸ் மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஃபென்சிங் முதன்மை பயிற்சியாளர் சரவணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்