Today news in tamil: நேற்று முதலாக சென்னையை கனமழை வெளுத்து வரும் நிலையில் பூண்டி ஏரியும் திறக்கப்பட உள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தாலும், நேற்று இரவு தொடங்கிய கனமழையும், சூறைக்காற்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் ஏற்கனவே தி நகர், அண்ணாசாலை, எழும்பூர் என பல பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதிலும் சிக்கல் உள்ளது. அதேசமயம் சென்னை அருகே உள்ள பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் தண்ணீரை திறந்துவிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கூவம், கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வெள்ள எச்சரிக்கையை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை தண்ணீரே சாலைகளில் வடியாத சூழலில், ஏரியும் திறக்கப்படுவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K