செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (15:58 IST)

ஆர்.கே.நகர் தேர்தல் ; திமுக போட்ட கணக்கு : எங்கே நடந்தது தவறு?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்தது திமுகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவில் பலமான ஒற்றைத் தலைமை இல்லை. எடப்பாடி - ஓபிஎஸ்- தினகரன் என மூன்று தலைமைகளாக அதிமுக பிரிந்தது. அதன்பின் எடப்பாடி - ஓபிஎஸ் அணி ஒன்றாக சேர்ந்தது. ஆனால், தினகரன் தனி அணியாக பிரிந்தார்.
 
இந்த நிலையில்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிப்பு வந்தது. ஜெ.வின் மறைவு, ஒற்றைத் தலைமை இல்லாதது, ஆளும்  கட்சியின் மீது மக்களுக்குள்ள அதிருப்தி என திமுக வெற்றி பெறுவதற்கு வலுவான காரணங்கள் இருந்தன. மேலும், அதிமுக ஓட்டுகளை நிச்சயம் தினகரன் பிரிப்பார். எனவே, நாமே வெற்றி பெறுவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கணக்கு போட்டார். ஆனால், நடந்ததோ வேறு.
 
வாக்கு எண்ணிக்கையின் தொடக்க முதலே திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 3ம் இடத்திலேயே இருந்தார். இறுதியில் 24,651 ஓட்டுகள் பெற்று டெபாசிட் தொகையை இழந்தார். பதிவாக மொத்த வாக்குகளில் 13.93 சதவீத வாக்குகளை மட்டுமே அவர் பெற்றார். இதுவே, 2016 ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சிம்லா ராஜேந்திரன் 57,673 வாக்குகள் பெற்றார். அதாவது, பதிவான வாக்குகளில் 33.14 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். 

 
அதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஆர்.கே.நகரில் திமுக தனது வாக்கு வங்கியில் 19.21 சதவீத வாக்குகளை பறிகொடுத்துள்ளது. அநேகமாக அந்த வாக்குகள் தினகரனுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. எது எப்படி நடந்தது?
 
எடப்பாடி பழனிச்சாமி-ஓபிஎஸ் ஆகியோர் திமுகவிற்கு ஜெயலலிதாவிற்கு இணையான தலைமை போட்டியாளர்கள் இல்லை என ஸ்டாலின் கருதியிருக்கலாம். அது உண்மைதான். ஆனால், தினகரனை திமுக குறைத்து மதிப்பிட்டது தவறு. 
 
மருதுகணேஷிற்கு பதில் வேறொரு வேட்பாளரை திமுக தரப்பில் நியமித்திருக்க வேண்டும் என பல திமுகவினரே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் திமுக தரப்பில் நட்சத்திர பேச்சாளர்கள் நியமிக்கப்படவில்லை. அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம்.
 
இப்படி சில காரணங்கள் இருந்தாலும், வேறு சில கருத்துகளும் முன் வைக்கப்படுகிறது. இது திமுகவின் ராஜ தந்திரங்களில் ஒன்று. தினகரன் வெற்றி பெறுவதன் மூலம் அதிமுகவில் பிளவு ஏற்படும். மீண்டும் சட்டசபை தேர்தல்  வரும். அப்போது திமுகவே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். எனவே, திமுகவினர் திட்டம் போட்டு தினகரனை வெற்றி பெற வைத்துள்ளனர் என சிலர் பேசுகிறார்கள்.

 
அதேபோல், தினகரனும், திமுகவும் கூட்டு சேர்ந்து சதி செய்து விட்டதாக எடப்பாடி-ஓபிஎஸ் உள்ளிட்டோர் பகீரங்கமாக புகார் கூறுகின்றனர். 
 
இதை வேறு மாதிரி பார்த்தால், ஜெ.வின் தலைமை இல்லாத சூழ்நிலையில், திமுக வெற்றி பெறுவது அக்கட்சிக்கு நல்லது. அதன் மூலம், இரட்டை இலையின் மவுசு குறைந்து, இனிமேல் திமுகவிற்குதான் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற தோற்றம், ஆர்.கே.நகரில் திமுக வெற்றி பெற்றால் ஏற்படும் என ஸ்டாலின் நம்பியிருக்கலாம். அப்படியிருக்கும் போது ஏன் தினகரனை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதுவும் பிரதான எதிர்கட்சி டெபாசிட் இழப்பு இன்னும் அசிங்கம்தானே எனவும் சிலர் கூறுகின்றனர்.
 
தினகரனின் வெற்றிக்கு திமுக காரணம் என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுகளை கேட்டு டென்ஷன் ஆன ஸ்டாலின் “ அவர்கள் இரு அணியாக பிரிந்து நிற்கும் போது, நாம் சுலபமாக வெற்றி பெறுவோம் என நான் தொடர்ந்து கூறி வந்தேன். அப்படியிருக்க, தினகரன் வெற்றி பெற்றதற்கு நான் எப்படி காரணமாக இருக்க முடியும்? அவர்கள் செய்யும் அரசியலில் என்னை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறார்கள்?’ எனக் கோபமாக கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஆர்.கே.நகர் தோல்வி குறித்து ஆராய திமுக தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வருகிற 29ம் தேதி கட்சி நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறவுள்ளது. 
 
அதோடு, யாரையோ திமுக ஆதரிக்கிறது என்ற விஷம பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். திமுகவின் தனித்தன்மையை உரசிப்பார்க்க வேண்டாம். ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் சக்தி திமுகவிற்கு மட்டுமே உண்டு. 
 
இடைத்தேர்தல் தோல்வியை ஆராய்ந்து புதிய சக்தியுடன் திமுக இயங்கும். பெரா வழக்கை சந்திப்பவர்கள் (தினகரன்) மூலம் ஆட்சி மாற்றம் வரும் என நினைப்பது பகல் கனவு” என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.